நாமக்கல்

சத்துணவுத் திட்டத்துக்காக முட்டை  உற்பத்தியைப் பெருக்க வேண்டும்: என்.இ.சி.சி. அறிவுறுத்தல்

2nd Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

சத்துணவுத் திட்டத்துக்காக முட்டை உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்.இ.சி.சி.)  தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹைதராபாத் மண்டலத்தில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 2 காசுகள் உயர்ந்து ரூ.4.21-ஆக உள்ளது. வரும் நாள்களில் மேலும் 3 முதல் 5 காசுகள் உயர்ந்து ஜூலை 12-ஆம் தேதிக்குள் அங்கு ரூ.4.50-ஐ எட்டும்.
தென் மேற்கு பருவமழை பரவலாக இருப்பதால், வரும் நாள்களில் முட்டை நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் சத்துணவுக்கான ஒரு நாள் முட்டை தேவை ஒரு கோடியாக உள்ளது. 
பெரும்பாலான பண்ணையாளர்கள் கோழிகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க, முன்னதாகவே இறைச்சிக்காக வயதான கழிவுக் கோழிகளை பிடிப்பதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளன. 
இந்தக் காரணங்களால் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. ஒரு முட்டை ரூ.5-ஐ எட்டுவதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே, பண்ணையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்த விலையில் இருந்து 30 காசுகளுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். இந்திய அளவில் முட்டை சந்தையின் போக்கை உணர்ந்து அதற்கேற்றார்போல் பண்ணையாளர்கள் தொழில் செய்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முட்டை விலை ரூ.5 காசுகள் உயர்வு: இந்த நிலையில்,  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை உயர்வு தொடர்பாக கோழிப் பண்ணையாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஹைதராபாத் மண்டல விலை உயர்வை சுட்டிக் காட்டியும், சீதோஷ்ண நிலை மாற்றம், சத்துணவு தேவை ஆகியவற்றை எடுத்துக் கூறியும் விலையை 5 காசுகள் உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை, ரூ.4.60-ஆக நிர்ணயிக்கப்பட்டது. 
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-421, விஜயவாடா-420, பார்வாலா-387, மைசூரு-455, ஹோஸ்பெட்-410, சென்னை-470, மும்பை-472, பெங்களூரு-445, கொல்கத்தா-467, தில்லி-397.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.68-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT