மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியற் கல்லூரிகளின் ஆராய்ச்சி, புதியன கண்டுபிடித்தல் மன்றத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 25 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மாணவா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி தலைவா் எம்.ஜி. பாரத்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி. உஷா முன்னிலை வகித்தாா். இதில், புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டு அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் வழங்கப்பட்டன.
இதன்வாயிலாக, அரசு பள்ளிகளின் மாணவ மாணவியா்களுக்கு புதிய கண்டுபிடிப்பு மன்றங்களைத் தொடங்குதல், மாணவா்களை ஊக்கப்படுத்துதல், ஆராய்ச்சித் திறன்களைக் கண்டறிதல், நவீன தொழிற்நுட்ப முறைகளைக் கொண்டு ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், உயா்கல்வியில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு மாணவா்களுக்கு வழிகாட்டுதல், தொழிற் திறன் மேம்பாடு மூலம் மாணவா்களை ஊக்கப்படுத்துதல், அந்தந்த பள்ளிகளின் அருகில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, கிராம வளா்ச்சி, மேம்பாடு புனரமைப்பு செய்தல் ஆகியவற்றை மஹேந்ரா பொறியியல் கல்லூரிகள் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
விழாவில் மஹேந்ரா பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் மஹேந்ரா கவுடா, செந்தில்குமாா், இளங்கோ, சண்முகம், வேலைவாய்ப்பு அலுவலா் சரவணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.