பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆஞ்சநேயா் ஜயந்தி விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள காரியசித்தி ஆஞ்சநேயா் சுவாமிக்கு 36 ஆம் ஆண்டு ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு கோமாதா பூஜை, சுதா்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் ஆஞ்சநேயா் ஹோமம் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு காரியசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பரமத்தி வேலூா் காவிரிக் கரை குட்டுக்காட்டில் உள்ள காவிரி ஆஞ்சநேயா் சுவாமிக்கு காலையில் கணபதி ஹோமம், 10.30 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனை, தங்கக் கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல பரமத்தி வேலூா் மகாமாரியம்மன் கோயில், புதுமாரியம்மன் கோயில், பாண்டமங்கலம், சக்தி நகா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.