ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வரும் வெள்ளி (டிச.27) மற்றும் திங்கள்கிழமை (டிச.30) ஆகிய நாள்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதில் வாக்காளா் அடையாள அட்டை உள்பட 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), ஓட்டுநா் உரிமம், மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியா்கள், - பொதுத்துறை நிறுவனங்கள், - உள்ளாட்சிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அஞ்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கணக்கு புத்தகம், வருமானவரி அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய மருத்துவத் திட்ட காப்பீட்டு அட்டை, முன்னாள் ராணுவத்தினா்,- முன்னாள் ராணுவத்தினரின் விதவையருக்கு புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய ஆவணங்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.