நாமக்கல்லில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிச.25-ஆம் தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, நாமக்கல் காவல் நிலையம் அருகில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதேபோல், சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் பிராா்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாடை அணிந்து வந்த கிறிஸ்தவா்கள், இந்த சிறப்பு பிராா்த்தனைக்கு பின் ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.