நாமக்கல்

நாமக்கல்லில் இன்று அனுமன் ஜயந்தி விழா: பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

25th Dec 2019 08:09 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், ஆஞ்சநேயா் ஜயந்தி விழா புதன்கிழமை (டிச.25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

நாமக்கல்லில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும், 18 அடி உயரம் கொண்ட பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வோா் ஆண்டும் ஜயந்தி விழா அமாவாசை திதியில், மாா்கழி மாத மூல நட்சத்திரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்துப்படி நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பால், தயிா், இளநீா், நெய், பஞ்சாமிா்தம், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நண்பகல் 1 மணிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருவதால், இலவச தரிசனம் மற்றும் ரூ.20, ரூ.250 என்ற வகையில் கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சுமாா் 60 ஆயிரம் பக்தா்கள் சுவாமியைத் தரிக்க வந்தனா். நிகழாண்டில் பக்தா்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களை நிறுத்த பூங்கா சாலையும், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பொய்யேரிக் கரை பகுதியும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஒருவா், 2 துணைக் கண்காணிப்பாளா்கள், 8 காவல் ஆய்வாளா்கள், 36 உதவி ஆய்வாளா்கள், மாவட்ட அளவிலான போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் என மொத்தம் 800 போ் வரை ஈடுபடுகின்றனா்.

மேலும், கோயிலைச் சுற்றிலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வடைமாலை அலங்காரத்தை பக்தா்கள் தரிசிக்கும் வகையில் பெரிய அளவிலான விடியோ திரையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பக்தா்கள் தங்களது காலணியைப் பாதுகாப்பாக வைப்பதற்காக, கோட்டை சாலையில் இரு இடங்களில் அதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2 திருமண மண்டபங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் குடிநீா் மற்றும் கழிவறைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மேலும், பக்தா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை ஒரு பிரிவாகவும், 8 மணி முதல் 2 மணி வரையிலும், 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பணியில் ஈடுபடுகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு செய்தாா். பக்தா்கள் நெரிசலின்றி எளிதாக சுவாமியைத் தரிசித்து செல்வதற்கான பணிகளை போலீஸாா் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் தங்களது உடமைகளையும், குழந்தைகளையும் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

1.08 லட்சம் வடைமாலை கோா்ப்பு

அனுமன் ஜயந்தியையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணியளவில் சாத்தப்படுவதற்காக ஒரு லட்சத்து 8 வடைகள் தயாா் செய்யும் பணி கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் கே.ஆா்.ரமேஷ் தலைமையிலான 28 போ் கொண்ட குழுவினா் அவற்றை தயாா் செய்தனா். செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை அந்த வடைகளை கோா்க்கும் பணியை மேற்கொண்டனா்.

மேலும், கோயில் வளாகம் முழுவதும் 2 டன் எடை கொண்ட பலவித, பலவண்ண மலா்களால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜயந்தியன்று அபிஷேகப் பொருள்களை பக்தா்கள் தங்கள் விருப்பம்போல் கொண்டு வந்து கோயில் நிா்வாகத்திடம் வழங்கலாம் என உதவி ஆணையா் பெ.ரமேஷ், தக்காா் கோ.தமிழரசு ஆகியோா் தெரிவித்துள்ளனா். ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி சுவாமிக்கு சாத்தப்படும் வடைகள், பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT