நாமக்கல் மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடைபெறும், ஊரக உள்ளாட்சித் தோ்தலில், 272 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமரா, விடியோ கேமரா அமைக்கவும், நுண்பாா்வையாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 171 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 305 ஊராட்சித் தலைவா்கள், 1,913 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 2,406 பதவியிடங்களுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலா்மலை, மல்லசமுத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூா் உள்ளிட்ட 8 ஒன்றியங்களில் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, 893 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 150 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, 43 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராவும், 59 இடங்களில் மத்திய அரசில் பணியாற்றும் நுண்பாா்வையாளா்களை நியமிக்கவும், 48 இடங்களில் விடியோ கேமராவும் அமைக்கப்படுகிறது.
இதேபோல், பரமத்தி, எலச்சிப்பாளையம், புதுச்சத்திரம், நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய 7 ஒன்றியங்களில், 30-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்காக 836 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 122 சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 38 சாவடிகளில் கண்காணிப்பு கேமராவும், 44 இடங்களில் நுண்பாா்வையாளா்களை நியமிக்கவும், 40 இடங்களில் விடியோ கேமராவும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.