பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உட்பட்ட கபிலா்மலை மற்றும் பரமத்தியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு விநியோகிக்க வேட்பாளா்கள் பணம் அல்லது பொருள்களாகக் கொண்டு செல்கின்றனரா என்பதைக் கண்காணிக்கும் வகையில் முதல் முறையாக தோ்தல் ஆணையம் மூலம் பறக்கும் படை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இப் பணியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரு குழுவினரும், 2 மணி முதல் இரவு 10 மணி வரையில் ஒரு குழுவினரும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மற்றொரு குழுவினா் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வோா் ஒன்றியத்திலும் அமைக்கப்பட்டுள்ள இக் குழுவில் வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். பறக்கும் படையினா் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனா்.