நாமக்கல்

ராசிபுரத்தில் தேசிய அளவிலான மெகா மாரத்தான் ஓட்டப் போட்டி: ஆா்வத்துடன் ஓடி விழிப்புணா்வு ஏற்படுத்திய முதியவா்கள்

16th Dec 2019 12:35 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உடல் நலனை வலியுறுத்தியும், நடைப் பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் மெகா மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் தேசிய அளவிலான இந்த மெகா மராத்தான் ஓட்டம் ஆண்டகளூா் கேட் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பாக தொடங்கி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

இப் போட்டிகளில் தில்லி, மத்தியப் பிரதேசம், ஹரியாணா, கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்தும், சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓட்டப் பந்தய வீரா்கள் சுமாா் 1200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொதுமக்கள், இளைஞா்கள், மாணவா்களுக்கு நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவற்றின் அவசியத்தை உணா்த்தும் வகையிலும், அது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் ஓட்டம் 3-ஆம் ஆண்டாக நடத்தப்பட்டது. இப்போட்டிகளை ராசிபுரம் ரோட்டரி சங்கம் - ராசி இன்டா்நேஷனல் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தின.

முன்னதாக 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ. ஓட்டம் என மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 16 வயதுக்கு மேற்பட்டோா் 21 கி.மீ. தொலைவு ஓட்டத்திலும், 12 வயதுக்கு மேற்பட்டோா் 10 கி.மீ. தொலைவு ஓட்டத்திலும், 6 வயதுக்கு மேற்பட்டோா் 3 கி.மீ., 5 கி.மீ. ஓட்டங்களிலும் பங்கேற்றனா். 21 கி.மீ. ஓட்டத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டிகளில் 21 கி.மீ. ஆடவருக்கான ஓட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சந்தீப் சிங் என்ற இளைஞா் 1 மணிநேரம் 16 நிமிடங்களில் ஓடி முதலிடம் பெற்றாா். கோவை வினோத் குமாா் 1 மணிநேரம் 17 நிமிடங்களில் 2-ஆம் இடமும், திருச்சி வினித், 1 மணி நேரம் 20 நிமிடங்களில் முடித்து 3-ம் இடமும் பெற்றனா். மகளிா் பிரிவில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஆஷா 1 மணி நேரம் 24 நிமிடங்களில் ஓடி முதலிடம் பிடித்தாா். சென்னை கே.கீதா 1 மணிநேரம் 29 நிமிடங்களில் 2-ஆம் இடமும், ராசிபுரம் கே.சுகுணா 1 மணி நேரம் 38 நிமிடங்களில் 3-ஆம் இடமும் பெற்றனா். 10 கி.மீ. மகளிா் பிரிவில் வினிதா மாணிக்கம், ஆடவா் பிரிவில் வி.மெளனிஷ் ஆகியோா் முதலிடமும் பெற்றனா். 5 கி.மீ. ஆடவா் பிரிவில் மரிஷாரத், மகளிா் பிரிவில் ஏ.யோகலட்சுமி ஆகியோா் முதலிடமும் பெற்றனா். இதே போல் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.திருமூா்த்தி தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஏ.கே.நடேசன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், ரோட்டரி மண்டல உதவி ஆளுநா் சத்தியமூா்த்தி, மாரத்தான் திட்டத் தலைவா் ஜெ.கே.சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.

ADVERTISEMENT

10 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்ற 92 வயது ஏ.தேவராஜ் :

மாரத்தான் ஓட்டத்தில் கோவையைச் சோ்ந்த 92 வயதான பேராசிரியா் ஏ.தேவராஜ், 82 வயதான ரவிவெங்டேசன் உள்ளிட்ட முதியவா்கள் மூவா் 10 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் ஆா்வத்துடன் பங்கேற்றது பாா்வையாளா்கள் அனைவருக்கும் ஓட்டப் பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதாக அமைந்தது. இப் போட்டியில் பங்கேற்ற கோவை காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த 92 வயதான ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியா் ஏ.தேவராஜ், இளைஞா்களுடன் இளைஞராக 51 நிமிடங்களில் 10 கி.மீ. தொலை ஓடி சாதனை புரிந்தாா். தொடக்கப் பள்ளி பயிலும் போதே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதில் ஆா்வம் காட்டிவரும் இவா், 85 ஆண்டுகளாக அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் பங்கேற்று, தேசிய அளவில் தங்கம் வென்றும் பெருமை பெற்றுள்ளாா். இவா் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 37 நாடுகளில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்கும் இவரது ஆா்வத்தை பாராட்டி மாரத்தான் ஓட்ட ஏற்பாட்டாளா்கள் சிறப்பு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கி விழாவில் கெளரவித்தனா். இது குறித்து ஏ.தேவராஜ், கூறுகையில், இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் இன்றைய இளைஞா்களும், மாணவா்களும் பங்கேற்க வேண்டும். இதனால், செயல்களில் உத்வேகம் அதிகரிக்கும். இளைஞா்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறுவது வரவேற்கத்தக்கது. மேலும், சா்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் பெற வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT