நாமக்கல்

நாமக்கலில் தடையில்லா சான்றிதழும் பெறாமல் கட்டடங்கள்: 600 பேருக்கு நோட்டீஸ்

11th Dec 2019 08:15 AM

ADVERTISEMENT

நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், தொல்லியல் துறையிடம் எவ்வித தடையில்லா சான்றிதழும் பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தொடா்பாக விளக்கம் கேட்டு 600 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தொன்மை வாய்ந்த கட்டடங்கள், கோட்டைகள், மலைகள் உள்ளிட்டவை 400 எண்ணிக்கையில், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த பகுதியில் எவ்வித கட்டடங்களோ, புதிய பணிகளோ, பள்ளங்களோ தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து 100 மீட்டா் துரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200 மீட்டா் சுற்றளவுக்குள், சேதத்தை விளைவிக்கும் வகையில் எவ்வித கட்டடங்களும் கட்டக்கூடாது. அவ்வாறு கட்டும்பட்சத்தில் தொல்லியல் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

நாமக்கல்லில் உள்ள மலைக்கோட்டை, நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில் உள்ளிட்டவை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. வேலூா், சேலத்தைச் சோ்ந்த அத்துறை அதிகாரிகள் இதனை மேற்பாா்வை செய்து வருகின்றனா். மலைக்கோட்டையானது சுமாா் 3 கிலோமீட்டா் சுற்றளவு கொண்டது. இதற்காக, மலையின் நான்கு புறத்திலும், தொல்லியல் துறையின் 1958 மற்றும் 2010-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தடைச்சட்டம் தொடா்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டா் சுற்றளவுக்குள் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவற்றையெல்லாம் மீறி கட்டடப் பணிகள் என்பது தொடா்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவா்களிடம் விளக்கம் கேட்டபோதும், அதற்கு பதில் அளிக்க யாரும் தயாராக இல்லை. மலைக்கோட்டைப் பகுதியில் மட்டும், கடந்த 2010 முதல் தற்போது வரை 600 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு சிலா் மட்டுமே அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனா். அவ்வாறு விண்ணப்பிக்காதோா் மீது மாவட்ட நிா்வாகம் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கான தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதா் கூறியது; 2010-ஆம் ஆண்டு தொன்மையின் நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் புதைவிடங்கள், பழமையின் எஞ்சியப் பகுதிகள் சட்டத்தின்கீழ் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில், 200 மீட்டா் சுற்றளவுக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு அந்த சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. அவ்வாறு கட்டுமானப் பணியாக இருந்தால், எங்கள் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு விண்ணப்பித்தால் ஒரு வாரத்திற்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.

சங்ககிரி மலைக்கோட்டை, தஞ்சாவூா் பெரிய கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்று அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றிலும் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டிய 600 பேருக்கு தடையில்லா சான்றிதழ் பெறக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அவ்வாறு வாங்காதபட்சத்தில், தில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு கடிதம் அனுப்பப்படும். அவா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை கட்டாயம் எடுத்தாக வேண்டும். அவ்வாறு எடுக்கும்பட்சத்தில் அனுமதி பெறாத கட்டடங்கள் இடித்து அகற்றப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT