நாமக்கல்

ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை அமைக்க அறிவுரை

30th Aug 2019 09:42 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகள் அமைக்க வேண்டும் என இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்களுக்கு பரமத்தி வேலூர் போலீஸார் அறிவுரை வழங்கினர்.
 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். பரமத்தி வேலூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
 கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்தல் மற்றும் ஊர்வலமாக எடுத்துச்செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
 இதில் களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான விநாயகர் சிலைகள் மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
 விநாயகர் சிலைகள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடம் ஓலை மேய்ந்த குடிசையாக இருக்கக் கூடாது, கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சிலை வைக்கப்பட வேண்டும். சிலைகள் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.
 மது அருந்திவிட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள கூடாது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது தனிபட்ட நபரையோ அல்லது மற்ற மதத்தினரையோ புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது.
 கூட்டத்தில் இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத், மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன், இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT