நாமக்கல்

நாமக்கல்லில் இன்று ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

30th Aug 2019 09:42 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
 அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்பில், நாமக்கல்லில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை(ஆக.30) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்த திருநாளை சான்றோர்கள் பல ஆண்டுகளாக, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர்.
 இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்த விழா, தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரே ஆவார்.
 கிருஷ்ணரது, தோற்றமும், செயல்களும் திவ்யமானவை என்பதை அறிபவர்கள், இந்த உடலை விட்ட பின் மீண்டும் இப்பெளதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அவர்கள், கிருஷ்ணரின் நித்திய உலகை அடைவதாக பகவத் கீதை உறுதிபடுத்துகிறது. எனவே, இவ்வியக்கத்தின் சார்பில் நாமக்கல் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
 இஸ்கான் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஜென்மாஷ்டமி விழா, நிகழாண்டில், நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது.
 மாலை 6 மணிக்கு தொடங்கும் விழாவில், பஜனை, உபன்யாசம், கேள்வி, பதில், இரவு 8.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா ஆரத்தி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதில், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாத விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் விழாவில் பங்கேற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற வேண்டும் என இஸ்கான் தெரிவித்துள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT