ஓட்டுநர் பற்றாக்குறையைப் போக்க, மாவட்ட தலைநகரங்களில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 37-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மகாசபைக் கூட்டம், நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்கத் தலைவர் கே.பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் எம்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலாளர் ஆர்.வாங்கிலி பங்கேற்றுப் பேசினார்.
இதில், லாரித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் அத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் முன்னேற்றமடைவர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு சுங்கச்சாவடியில் உள்ளது போல், தனியார் சுங்கச்சாவடிகளிலும் குறைவான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, நகரைச் சுற்றிலும் வட்ட வழிச் சாலை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
லாரித் தொழிலுக்கு மற்ற தொழில்கள் போல் அரசால் தொழில் அந்தஸ்து வழங்கி, மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்கள் பற்றாக்குறையைப் போக்க மாவட்டத் தலைநகரங்களில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அரசால் தொடங்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், ஆட்டோ நகர் சங்கத் தலைவர் பழனிசாமி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் தங்கவேலு, முன்னாள் நாமக்கல் தாலுகா உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி உள்பட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.