ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகளவில் உள்ளதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
குருசாமிபாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்துக் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் பன்றிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அங்கேயே எரிக்கப் படுவதால் அப்பகுதியில் குடியிருப்போரின் சுகாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையைத் தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனைடுத்து, மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜுடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து நேரில் சென்ற எம்.பி. மயானத்தை பார்வையிட்டு, மயானத்தில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை வேறு இடத்துக்கு மாற்றவும், மயானத்தில் பன்றிகளை தடுக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும் அவர் அறிவுறுத்தினார்.