நாமக்கல்

12 லட்சம் பனை கன்றுகள் நடவு செய்யத் திட்டம்: ஆட்சியர் தகவல்

27th Aug 2019 10:54 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ், 12 லட்சம் பனை கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொல்லிமலை, பள்ளிபாளையம் மற்றும் கபிலர்மலை தவிர மற்ற 12 வட்டாரங்களில், நடப்பாண்டில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் சோளம், பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. சோளத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.700, பச்சைப்பயறு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500, நிலக்கடலை ஒரு ஹெக்டேருக்கு ரூ.5,700-க்கு இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.  
மேலும், தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை மேம்படுத்திட, நாமக்கல் மாவட்டத்தில் 12 வட்டாரத்துக்கும் மொத்தம் 12 லட்சம் பனை கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தரமான பனங்கொட்டைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாவாரி பகுதியில் நிலத்தடி நீரை தக்க வைக்கவும், மண் அரிமானத்தை தடுக்கவும், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பனை உணவுப் பொருள்களான பதநீர், கருப்பட்டி, பனஞ்சர்க்கரை, பனங்கற்கண்டு, பனங்கூழ் போன்றவற்றை உற்பத்தி செய்து மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  மேலும், வேளாண் துறையின் மூலம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும், தரமான பனங்கொட்டைகளை விவசாயிகள் விதைப்பு செய்து பயனடையலாம். 
பனை மர நடவு முறைகள் விவரம்: நல்ல தரமான அதிக மகசூல் தரக்கூடிய 30 முதல் 40 வயதான பழுத்த, பாதிப்பில்லாத, எடை குறையாத, முதிர்ச்சியடைந்த, மரக்கிளையிலிருந்து பனங்கொட்டையைத் தேர்வு செய்து நடவேண்டும்.  நடவு செய்ய ஏற்ற காலம் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையாகும். 
பனங்கொட்டை மற்றும் அதன் விநியோகம் முளைப்பு எண்ணிக்கை அந்தந்த வட்டார தொகுப்பு மேம்பாட்டுக் குழுவினரால் பதிவேடு பராமரித்து
கண்காணிக்கப்படும். 
 தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், வேளாண் துறையின் மூலம் ஆறு மாத வயதுடைய ஒரு அடி உயரமுள்ள கட்டுமான உபயோக மரங்கள் ஹெக்டேருக்கு 5 எண்கள் வீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.  இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம், மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு மண் அரிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் மேற்கண்ட முறையில் பனங்கொட்டை, கட்டுமான உபயோக மர நாற்றுகளை பெற்று தங்கள் பகுதி நீரின் ஆதாரத்தை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். 
மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் அந்தந்தப் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். வேளாண் விரிவாக்க மைய தொலைபேசி எண்கள்: 
நாமக்கல்- 04286-233698, புதுச்சத்திரம்-04286-243333, சேந்தமங்கலம்-04286-270027, எருமப்பட்டி- 04286-252225, மோகனூர்- 04286-255555, நாமகிரிபேட்டை-04287-240526, ராசிபுரம்-04287-224678, வெண்ணந்தூர்-04287-264109, திருச்செங்கோடு-04288-252609, எலச்சிபாளையம்-04288-231242, மல்லசமுத்திரம்-04268-251220, பரமத்தி-04268-251220 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT