லாட்டரி விற்பனை, மணல் திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஈஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:-
நாமக்கல் மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை, சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை வெளியேற்றுதல், சட்ட விரோதமான மது விற்பனை போன்றவை நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது. இதுபோன்ற செயல்களில்ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, லாரி, போர்வெல், விசைத்தறி என பல்வேறு தரப்பட்ட சங்கங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இருந்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றார்.
இதில், திருச்செங்கோடு பட்டறை மேடு பகுதியில் வட நாட்டிலிருந்து வரும் போர்வெல் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சுகாதார வளாகத்தை அமைக்க வேண்டும், திருச்செங்கோடில் போக்குவரத்து நெரிசலைகு குறைக்கச் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். விசைத்தறிகளுக்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள்அளிக்கப்பட்டன.