நாமக்கல்

உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைக்க பயிற்சி

27th Aug 2019 10:50 AM

ADVERTISEMENT

கொல்லிமலை வட்டார குண்டனிநாடு, ஆலத்தூர்நாடு வருவாய் கிராமத்தில் உள்ள உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு அட்மா திட்டத்தின் கீழ் "உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைத்தல்' குறித்து ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கொல்லிமலை வேளாண் உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி  பயிற்சியில் கலந்துகொண்ட உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களை வரவேற்று, பயிற்சியின் நோக்கம், ஏற்கெனவே செயல்பட்டு வரும் உழவர் ஆர்வலர்கள் குழு, உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு, கொல்லிமலை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநிலத் திட்டங்கள், மானியங்கள், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், சேலம், கல்வராயன்மலை உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன நிறுவனர் செந்தில்குமார், வேளாண் சார்ந்த தொழில்கள், வேளாண் பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் ஆரம்பித்தல், அரசின் சலுகைகள், நிறுவனத்துக்காக நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செயல் விளக்கம், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இப்பயிற்சி வகுப்பில் கொல்லிமலை வட்டார வேளாண் அலுவலர் சத்தியபிரகாஷ், துணை வேளாண் அலுவலர் சேகர், அந்தந்த வருவாய் கிராமங்களில் உள்ள இ-சேவை மையத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டனர். மேலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், மழைத்தூவி போன்ற பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகள் தமிழக அரசு வழங்கும் முழு மானியத்துடன் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் பெற்றிடவும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
இப்பயிற்சியில் உதவி வேளாண் அலுவலர்கள் செல்லதுரை, பிரபு ஆகியோர் விதை நேர்த்தி, அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்து, செயல்விளக்கம் செய்து
காண்பித்தனர்.
பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மா.ரமேஷ், கவிசங்கர் உழவன் செயலியின் பதிவிறக்கம், செயல்பாடுகள் அதன் பயன்கள் குறித்தும், அட்மா திட்டப் பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT