நாமக்கல்

தற்காலிக மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

23rd Aug 2019 09:01 AM

ADVERTISEMENT

சேந்தமங்கலம் அருகே உயர்மட்ட பாலம் கட்டும் இடத்தில் உள்ள தற்காலிக மண் சாலையை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்திலிருந்து வடுகப்பட்டி வழியாக எருமப்பட்டிக்கு சாலை உள்ளது. இந்தச் சாலையில், போக்குவரத்துக்காக பழையபாளையம் ஏரியின் முகத்துவாரத்தில் தரைப் பாலம் அமைக்கப்பட்டு, தற்காலிக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறும் போது தரைப்பாலம் மூழ்கி விடும். அது மட்டுமின்றி, அதிகப்படியாக தண்ணீர் சென்றால் ஒரு வாரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், ஏரி முகத்துவாரத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலம் அருகே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண் சாலை சேறும், சகதியாக மாறி வருகிறது. இதனால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர். இந்த நிலையில், பழையபாளையம் பகுதி மக்கள் பாலம் கட்டும் ஒப்பந்தகாரர்களிடம் மண் சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஒப்பந்ததாரர் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் 50 }க்கும் மேற்பட்டோர், பாலம் கட்டும் பணியை நிறுத்தக் கோரி வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் போலீஸார், அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து புதிய மண் சாலை அமைக்க அறிவுறுத்தப்படும் என அவர்கள் கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT