நாமக்கல்

பிலிக்கல்பாளையம் ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயர்வு

18th Aug 2019 05:14 AM

ADVERTISEMENT


 பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள்  வெல்லம் சர்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை உயர்வடைந்ததால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம்,  சோழசிராமணி, அய்யம்பாளையம்,  கபிலர்மலை,  பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி,  பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏலச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். வாரம்தோறும் சனி  மற்றும் புதன்கிழமைகளில் வெல்லம் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு  5 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும்,  4 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.  அதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,150 வரையிலும்,  அச்சு வெல்லம் ரூ.1,200 வரையிலும் ஏலம் போயின.  சனிக்கிழமை (ஆக.17) நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 5 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும்  கொண்டு வரப்பட்டிருந்தன.  இதில் 30 கிலோ கொண்ட  உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,250க்கும்,30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,300க்கும் ஏலம் போனது. 
வரத்துக் குறைந்ததால் வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT