ராசிபுரம் நகராட்சி பகுதியில் திடக்கழிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி 54 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராசிபுரம் நகராட்சியில் திடக்கழிவு திட்டம்- நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் மா.கணேசன் பேசியது: 1948-இல் தொடங்கி ராசிபுரம் நகராட்சியின் தற்போதையே மக்கள்தொகை 50,244. அனைவருக்கும் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டில் சேகரமாகும் குப்பைகளை நல்ல முறையில் உரமாக்குபவர்களுக்கு வார்டு தோறும் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் நெகிழி ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராசிபுரம் நகரில் உள்ள 32 பூங்காங்களுக்கான இடங்களை சீரமைத்து தூய்மைப் படுத்தி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நகரில் புதை சாக்கடை திட்டம் முழுமை பெற்று வருகிறது என்றார். விழாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 54 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி பொறியாளர் பெ.நடேசன், எ.டி.பாலகுமாரராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.