நாமக்கல்

வாராக் கடன்களை வசூலிக்க நடவடிக்கை வேண்டும்: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

11th Aug 2019 03:28 AM

ADVERTISEMENT


 வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய வாராக் கடன்களை, பெரும் நிறுவனங்களிடம் இருந்து வசூலிப்பதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில், பாங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ்.டி.ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: சுமார் 74 ஆண்டுகளாக வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும், வங்கி சேவைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் போராடி வந்தோம். அதைத்தொடர்ந்தே, 1969-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி வங்கிகள் பல தேசியமயமாக்கப்பட்டன. அப்போது 8 ஆயிரம் வங்கிக் கிளைகள் இருந்த நிலையில், தற்போது 50 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் 86 ஆயிரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. 
தற்போதைய மத்திய அரசு வங்கிகளை இணைத்து, அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என நினைக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலையை உருவாக்குகின்றது. 1991-இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் 39 முறை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. 2014-இல் பண மதிப்பிழப்பு நடைமுறையால் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். கருப்புப் பணத்தை ஒழிப்போம் எனக் கூறிய மத்திய அரசு, அதில் தோல்வியடைந்துவிட்டது. கருப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில்தான் இந்திய கருப்புப் பணம் அதிகளவில் உள்ளது. அதைக் கொண்டு வராமல், இங்குள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மக்களையும், வங்கி ஊழியர்களையும் மத்திய அரசு பாதிப்புக்குள்ளாகியது.  இதேபோல், ஜிஎஸ்டியால் தொழில், வேலைவாய்ப்புகள் பல அழிக்கப்பட்டன. தொழிலை மேம்படுத்த முடியாமல் பலர் தவிக்கின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கியான எஸ்பிஐ வங்கியுடன் அதன் கிளைகள் அனைத்தும் இணைக்கப்பட்டன. இதனால், நாடு முழுவதும் 6,950 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுவிட்டன. வங்கி ஊழியர்கள் பல்வேறு கிளைகளுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். இது மட்டுமின்றி பெரும் நிறுவன முதலாளிகள் எனக் கூறப்படும் விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றோர் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து விட்டனர். 
சாதாரண விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யத் தயங்கும் மத்திய அரசு, பெரும் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்களை வசூலிக்க முன்வர மறுக்கிறது. மக்களுக்கு சேவையாற்றவும், வங்கிகளைக் காப்பாற்றவும், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து போராடும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் கண்ணன், பாங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் எஸ்.மீனாட்சிசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் கோ.ரவிகோபால், செயலாளர் கே.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT