நாமக்கல்

மலைக்கோட்டையின் மேல் கழிவுநீர்க் குட்டை: ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்!

11th Aug 2019 03:28 AM

ADVERTISEMENT


நாமக்கல் மலைக்கோட்டையின் மேல், குட்டை போன்று காட்சியளிக்கும் பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. ஒருபுறம் நரசிம்மர் கோயிலும், மறுபுறம் ரங்கநாதர் கோயிலும் குடவறைக் கோயில்களாக உள்ளன. மலைக்கோட்டையின் மேல் பகுதியில் கோட்டை போன்று மதில் சுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் திப்புசுல்தான் இங்கு மறைந்திருந்து எதிரிகளை தாக்கினார் என்ற வரலாறு உண்டு. மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோட்டையின் மேற்பகுதியில், இஸ்லாமியர்களின் மசூதியும், வரதராஜ பெருமாள் கோயிலும் உள்ளன.
இந்த மலையின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் இரண்டு குட்டைகள் உள்ளன. அதில் மசூதி அருகில் உள்ள ஒரு குட்டையில் பல நாள்களான மழைநீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. மேலும், அதில் கழிவுநீர் போல் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் மலைப் பகுதிக்குச் செல்லும் சிறுவர்கள் அந்தக் குட்டையில் குளித்து விளையாடுகின்றனர். நீச்சல் குளம் போல் வடிவமைப்புடைய குட்டை 15 அடி ஆழமுடையதாகக் கூறப்படுகிறது. கழிவுநீர் தேங்கிய குட்டையில் சிறுவர்கள் குளிப்பதால் தேவையற்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொது இடங்களாக இருந்தால் முதலுதவி செய்வதற்கு மக்கள் விரைந்து வருவர். ஆனால் மலைக்கோட்டை மேல் பகுதியில், ஆள் யாருமற்ற சூழலில் சிறுவர்கள் குளித்து வருவது ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
சமூகவிரோதிகளின் கூடாரம்: 
மலைக்கோட்டைக்கு மேலே செல்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் மலைக்கோட்டை தவறு செய்பவர்களின் கூடமாக மாறிப்போயுள்ளது. இதைத் தடுக்க தொல்லியல் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT