நாமக்கல்லில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் தாலுகா பைனான்ஸ் அசோசியேஷனின் 27-ஆம் ஆண்டு மகாசபைக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அதன் தலைவர் பி.காளியப்பன் தலைமை வகித்தார். கே.சுப்பராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ்நாடு நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.அத்தியப்பன், பொருளாளர் வி.பழனிசாமி, முன்னாள் தாலுகா தலைவர் எம்.எஸ்.எஸ்.பொன்னுசாமி, ஆடிட்டர்கள் ஜெய.வெங்கடசுப்பிரமணியம், ஆர்.பழனிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இக் கூட்டத்தில், புறநகர் சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சி புறநகர் பேருந்து நிலையப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை சீரமைத்து மழை நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நசிந்து வரும் லாரித் தொழிலை மேம்படுத்தத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தாலுகா அளவிலான பைனான்ஸ் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.