பக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் சனிச்சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை திங்கள்கிழமை (ஆக.12) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குர்பானி எனும் நிகழ்வினை மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் இறைச்சியைத் தானமாக வழங்குவர். இதற்காக ஒட்டகம், ஆடுகள் பலியிடப்படும். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து ஆடுகளை வாங்குவர். திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடவுள்ளநிலையில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
ஈரோடு, தருமபுரி, கருர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். பொதுமக்கள் ஆடுகளின் தரத்தைப் பார்த்து அவற்றை வாங்கினர். வளர்க்கும் வகையிலான சிறிய ஆடுகள் ரூ.1,500 வரையிலும், அதன்பின் ஆட்டின் எடைக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கிய சந்தை காலை 10 மணி வரை மும்முரமாக நடைபெற்றது. இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.ஒரு கோடி வரையில் விற்பனையானதாகவும், கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகம் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.