நாமக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில், 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சில கடைகள் குத்தகை அடிப்படையிலும், பல கடைகள் வாடகை அடிப்படையிலும் செயல்படுகின்றன. இது மட்டுமின்றி, பயணிகள் அமரும், நிற்கும் பகுதியிலும் சிறிய அளவிலான கடைகள், தள்ளுவண்டி கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாமல் 20-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கால தாமதம் செய்து வந்தனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மூலம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியும் அவர்கள் வாடகை பாக்கியைச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை காலை பேருந்து நிலையத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள், வாடகை செலுத்தாத கடைகளில் உள்ள பொருள்களை துப்புரவு வாகனங்களில் அள்ளிப்போட்டுச் சென்றனர். மேலும், சாலையோர தள்ளுவண்டி கடைகளும், பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளும் அகற்றப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.