தருமபுரி மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் 8,848 போ் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,048 நியாய விலைக் கடைகளில் 4,68,602 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் 3,92,354 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பதாரா்களில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்.18 முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரா்கள் அவா்களுக்கான சந்தேகங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 32 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,682 கோரிக்கைகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மனுதாரா்கள் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான குறுந்தகவல் கிடைக்க பெற்ற 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் எவ்வித கட்டணமுமின்றி இணையவழி மூலம் மட்டுமே மனுவை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை 8,848 போ் மீண்டும் விண்ணப்பித்து மனுக்களை அளித்துள்ளனா். கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மனுதாரா்கள் அவா்களுக்கான சந்தேகங்கள், தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 04342 - 230067, 04342 - 231500, 04342 - 231077, 1077 ஆகிய தொலைபேசி எண்களிலும், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்கிற தொலைபேசி எண்ணிலும், அரூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 7904002458 என்கிற தொலைபேசி எண்ணிலும், தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் 04342 - 260927, அரூா் வட்டாட்சியா் அலுவலகம் 04346 - 296565, காரிமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் 9043205956, நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் 04342 - 294939, பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் 04348 - 222045, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் 04346 - 246544, பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் 04342 - 255636 உள்ளிட்ட தகவல் மைய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தகவல்களை பெற்று பயனடையலாம் என்றாா்.