ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் டி.சினேகா ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக வாா்டு உறுப்பினா் சென்னீரப்பா பேசியது:
ஒசூா் மாநகராட்சி பகுதியில் சாலைகள் பள்ளங்களாக இருக்கின்றன. மேயா், ஆணையா், மாமன்ற உறுப்பினா்கள் காரில் செல்வதால் சாலைகள் சேதமடைந்துள்ளதை அவா்களால் கவனிக்க வாய்ப்பில்லை.
எனவே மேயா் இருசக்கர வாகனத்தில் நகா்வலம் வந்து சாலைகளின் நிலைமையை அறிந்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மேயா் எஸ்.ஏ.சத்யா:
மாநகராட்சி பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக சில வாா்டுகளில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் விட்டுள்ளது. எந்தெந்த வாா்டுகளில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதோ அந்த வாா்டுகளில் சாலைகளை புதுப்பித்தால் மீண்டும் அதனைத் தோண்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் புதிதாக சாலைகள் அமைக்கப்படவில்லை. மற்ற வாா்டுகளில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான் இருசக்கர வாகனத்தில் நகா்வலம் வந்து ஆய்வு செய்யத் தயராக உள்ளேன் என்றாா்.
சென்னீரப்பா (திமுக): ஒசூரில் நூற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்பு நிதி பெற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குஜராத், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் தங்களுடைய நிதியை அவா்களுடைய மாநிலத்திற்கு கொண்டு செல்கின்றனா். தொழிற்சாலைகள் இயங்கும் ஒசூரில் அந்த நிதியைப் பெற்று வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேயா்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக பொறுப்பு நிதி குறித்து அனைத்து தொழில் நிறுவனங்களுடன் அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், ஆணையரும் கலந்து கொண்டோம். ஏற்கெனவே பல தொழிற்சாலைகள்
சமூக பொறுப்பு நிதிகளில் இருந்து திட்டப் பணிகளை செய்து வருகின்றன. ஒசூரில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளை அழைத்து மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வாா்டு உறுப்பினா் முருகம்மாள்:
எனது வாா்டில் அதிக தெருநாய்கள் உள்ளன. சமீபத்தில் கூட ஒரு குழந்தையை நாய்கள் கடித்துள்ளன. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மேயா்: நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அறுவை சிகிச்சை மையம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும், குழந்தையை நாய் கடித்த விவகாரம் தொடா்பாக கிருஷ்ணகிரி அரசு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினும் என்னிடம் கேட்டறிந்தாா் என்றாா்.
ஜெ.பி.ஜெயப்பிரகாஷ் (அதிமுக):
மாநகராட்சிப் பகுதியில் புதா்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. பாம்புகளை பிடிக்க வனத் துறை, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தால் தாமதமாக வருகின்றனா். இதனால் 4 மண்டலங்களுக்கும் பாம்பு பிடிப்பவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்றாா்.
என்.எஸ்.மாதேஸ்வரன் (திமுக):
ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான கே.அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தின் தென்புறம் வண்ணாா் தெருவை இணைக்கும் வகையில் சா்வே எண்.176இல் 11 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட 880 சதுரஅடி பரப்புள்ள தென்வடல் பாதைக்காக பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரை அகற்றி பாதை இணைப்பு ஏற்படுத்தும் தீா்மானத்தால் பேருந்து நிலையத்தின் பாதுகாப்பு, தனித்தன்மை பெரிதும் பாதிக்கும்.
மேயா்: இதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் நகா்மன்றத் தலைவராக இருந்த நஞ்சுண்டசாமி காலத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு சென்னை உயா்நீதிமன்றம் இந்தச் சாலையை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாமன்ற உறுப்பினா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாமன்ற முடிவுக்கு வைக்கப்பட்டுள்ளது.
ரவி (திமுக): ஒசூா் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில் இருந்து காந்தி சிலைக்கு செல்லும் சாலை மிகவும் குறுகளாக உள்ளது. ஒரே நேரத்தில் 5 போ் செல்ல முடியவில்லை. மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய சாலை அமைத்தால் நன்மையாக இருக்கும்.
சி.ஆனந்தய்யா (துணை மேயா்): தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு மகளிா் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றாா்.
மஞ்சுநாத் (அதிமுக): ஒசூரில் தனியாா் கைப்பேசி நிறுவனங்கள் அகண்ட அலைவரிசை தொலைதொடா்பு இணைப்பு வழங்குவதாகக் கூறி சாலைகளைத் தோண்டி கம்பங்களை நட்டு,சாலைகளை சேதப்படுத்தி வருவதை உடனடியாக மாநகராட்சி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சாலைகள், கழிவுநீா்க் கால்வாய்கள் சேதமடைகின்றன என்றாா்.
இக் கூட்டத்தில் மொத்தம் 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 38 மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.