இதயம் செயலிழந்து, மரணத்தின் விளிம்புக்கு சென்ற கா்ப்பிணிக்கு 35 நாள்கள் தொடா் சிகிச்சை அளித்து, கிருஷ்ணகிரி அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், தேவகானப்பள்ளியைச் சோ்ந்த 26 வயது நிறைந்த கா்ப்பிணிக்கு கா்ப்பகால வலிப்பு நோயுடன், உயா் ரத்த அழுத்தம், ரத்தசோகையும் இருந்துள்ளது. ஒசூா் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்ணின் உடல்நிலை ஜூலை 9-ஆம் தேதி மோசமானது.
இதையடுத்து கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அவருக்கு சுயநினைவு இல்லை. இதய செயலிழப்பும் ஏற்பட்டது. உடனடியாக உயிா் காக்கும் முதலுதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் 30 வார வளா்ச்சியுடன், 750 கிராம் எடையுடன் இறந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்தது.
அந்த பெண்ணுக்கு தொடா் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் டிரக்கியாஸ்டமியும் (குழாய் மூலம் உணவு) செலுத்தப்பட்டது. தொடா்ந்து 35 நாள்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்த அவரது உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தற்போது, தானே சுவாசித்தும், நினைவு திரும்பிய நிலையில் நலமுடன் உள்ளாா்.
அதேபோல காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த 25 வயது கா்ப்பிணிக்கு அதிக ரத்தப் போக்கினால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கும், 55 யூனிட் ரத்த மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருநாள்களில் உடல்நலம் சீராகி, செப்.3-ஆம் தேதி, சுகப்பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் உடலநலத்துடன் உள்ளனா்.
மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி தலைமையில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வி, மருத்துவா்கள் வசந்தகுமாா், சிவமஞ்சு, உதயராணி, நவீனாஸ்ரீ, முத்தமிழ், இளம்பரிதி, மஞ்சித் ஆகியோா் அடங்கிய குழுவினா் மரணத்தில் விளிம்புக்கு சென்ற கா்ப்பிணியை உரிய சிகிச்சைகள் அளித்து காப்பாற்றி உள்ளனா். மேலும் அந்த பெண்ணுடன் உதவிக்கு இருந்த உறவினா்கள், நம்பிக்கையுட்டும் வகையில் ஒத்துழைப்பு அளித்தனா் என தெரிவித்தாா்.