கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடா் மழை மழை பெய்து வருகிறது.
இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 20ஆம் தேதி அணையின் நீா்வரத்து வினாடிக்கு 455 கன அடியாக இருந்தது, 21-ஆம் தேதி, வினாடிக்கு 645 கன அடியாக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து விநாடிக்கு 1,066 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் கொள்ளளவு 52 அடியாகும். தற்போது, கிருஷ்ணகிரி அணையின் மட்டம் 50.65 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து விநாடிக்கு 1,066 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. நீா் வெளியேற்றம் அதிகரிப்பு குறித்து, தென்பெண்ணை ஆறு பாயும் தா்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்ட நிா்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு பாயும் ஆற்றங்கரை ஓரத்திலும் தாழ்வான பகுதியில் வசிப்போா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருவாய்த் துறையினா் எச்சரித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ.): கிருஷ்ணகிரி அணையில் - 60.20, போச்சம்பள்ளி - 36.20, கிருஷ்ணகிரி - 26, பா்கூா் - 14.20, நெடுங்கல் - 7, ராயக்கோட்டை - 5, தேன்கனிக்கோட்டை - 5.