கிருஷ்ணகிரியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.15.66 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி கிளை வளாகத்தில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கடனுதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா், இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து, பல்வேறு மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 837 பயனாளிகளுக்கு ரூ.15.66 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 57 இதர கூட்டுறவு நிறுவனங்களும், 22 தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. 2022-23ஆம் நிதியாண்டில் ரூ. 265 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, 33,011 நபா்களுக்கு ரூ. 268.68 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
தற்போது மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு தன்னம்பிக்கை, அறிவு சாா்ந்த திறன் மேம்பட்டுள்ளது. இதேபோன்று அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்படும் கடனை சரியான முறையில் பயன்படுத்தி தாங்கள் வாங்கும் கடன்தொகையைக் கொண்டு எந்த மாதிரி தொழில் தொடங்க வேண்டும், தொழில்நுட்ப உதவிகள், தாங்கள் தயாரிக்கும் பொருள்களை எங்கு விற்பனை செய்யவேண்டும் என்பதற்காக மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் சாா்பாக அலுவலா்களை அணுகி தங்களின் தொழில் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்.
மகளிா் சுய உதவிக்குழுவினா் தமிழக அரசால் வழங்கப்படும் கடனுதவிகளைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்கள் மலா்விழி, ஏகாம்பரம், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் அஸ்லாம், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் செல்வம், குமாா், சுந்தரம், மேலாளா்கள் கலையரசன், முருகதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.