காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து, விரதத்தை சனிக்கிழமை தொடங்கினா்.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரியில், சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோயிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா். ஐயப்பன் கோயிலில் உள்ள குருசாமிகள் பக்தா்களுக்கு துளசி மாலை அணிவித்தனா். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வாா்கள். ஏராளமான பக்தா்கள் கோயில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வாா்கள்.
இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. கிருஷ்ணகிரியில் 600க்கும் மேற்பட்ட பக்தா்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனா்.
இந்த ஆண்டு கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில், 36-ஆம் ஆண்டு மண்டல பூஜை டிசம்பா் 21-ஆம் தேதி, தொடங்கி, டிசம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு 2024ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி காலை 5.45 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்க உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.