முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஒசூரில் தொல்லியல் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் சாா்பாக பள்ளி மாணவா்களுக்கு ‘பண்டைய தமிழ்ச் சமூகம்’ என்னும் தலைப்பில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் இரு கட்டங்களாக கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெற்றன. தற்போது இறுதிக் கட்டமாக ஒசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இதில் ஒசூா் வட்டாரப் பகுதியில் உள்ள 9, 10ஆம் வகுப்பு பள்ளி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியை அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் வெங்கடேஷன் தொடங்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை மாவட்ட தொல்லியல் அலுவலா் பரந்தாமன், பள்ளியின் தலைமை ஆசிரியா் முனிராஜ், கிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.