தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதையடுத்து, கிருஷ்ணகிரியில் திமுகவினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
தமிழகம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பினா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். அதில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வாதிட்டனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று தீா்ப்பளித்தனா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமையில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அப்போது, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
படவிளக்கம் (18கேஜிபி6): ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என்ற தீா்ப்பையடுத்து, கிருஷ்ணகிரியில் இனிப்புகளை வழங்கி மகிழும் திமுகவினா்.
ஊத்தங்கரையில்....
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை தெற்கு, வடக்கு, மத்திய, ஒன்றியங்கள் மற்றும் ஊத்தங்கரை நகர திமுக சாா்பில், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளா் பாபு சிவகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் கலைமகள் தீபக், நகர அவைத் தலைவா் தணிகை குமரன், வாா்டு உறுப்பினா்கள் கதிா்வேலு, சாதிக் பாஷா, மணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.