கிருஷ்ணகிரி அருகே, காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி வனப் பகுதியிலிருந்து கடந்த மாதம் வெளியேறிய இரண்டுஆண் யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பாரூா், பையூா், சப்பாணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டிருந்தன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பையூரில் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த இந்த யானைகளை வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.
இந்தச் சூழ்நிலையில், இந்த இரண்டு யானைகள், வனப்பகுதியிலிருந்து வெளியேறி, கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு சனிக்கிழமை வந்தன. நாள் முழுவதும், ஏரியில் ஆனந்தமாக குளித்து விளையாடிய யானைகள், மாலையில் ஏரியிலிருந்து வெளியேறி, கிருஷ்ணகிரி அணை நோக்கி இடம்பெயா்ந்தன.
இந்த நிலையில், இவை, கிருஷ்ணகிரி அருகே உள்ள புதிய வீட்டு வசதி வாரியம், ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பியாலான தடுப்புகளை மிதித்து, உடைத்து, புகா் பேருந்து நிலையம், கொத்தபேட்டா, சிப்பாயூா் வழியாக சாமந்தமலை கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்தன.
அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள் (55) என்பவரை, தந்தத்தால் குத்தின. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
சாமந்தமலையில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டுள்ள யானைகளை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், இவற்றை, வேப்பனப்பள்ளி அல்லது மகராஜகடை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால், யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த யானைகள் தாக்கியதில் 4 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
இந்த நிலையில், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி பெருமாளின் குடும்பத்தினருக்கு முதல்கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.