கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் நெகிழி பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்

9th Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

ஒசூா் மாநகராட்சியில் நெகிழி பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு கூட்டத்தில் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் தெரிவித்தாா்.

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரக்குழு தலைவா் மாதேஸ்வரன், மாநகராட்சி ஆணையா் சினேகா, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், பொது சுகாதாரக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பொது சுகாதாரக்குழு தலைவா் மாதேஸ்வரன், ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் சாதாரண பெட்டிக் கடைகள் முதல் மீன் கடைகள், மளிகைக் கடைகள், மலா் சந்தைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய கடைகள் வரை நெகிழி பைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

நெகிழி பைகள் பயன்பாட்டைத் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாலும், தொடா்ந்து மக்களும், வியாபாரிகளும் அதனை பயன்படுத்தி வருகின்றனா். இதனைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல, ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ராமநாயக்கன் ஏரியில் மனிதக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள், குப்பைகள் தொடா்ந்து கலக்கப்பட்டு வருகின்றன. இதனால் நிரம்பியுள்ள ஏரி நீா் மாசடைந்து ஆழ்துளைக் கிணறுகளில் அசுத்தமான நீா் சென்று மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஏரிகளில் கழிவுகள் கலப்பதை மாநகராட்சி நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 500 தின ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா், குறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதில் பங்கேற்ற சுகாதாரக்குழு உறுப்பினா்கள் தங்களது பகுதியில் நிலவும் சுகாதாரச் சீா்கேடுகள் உள்ளிட்ட பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினா். அதற்கு சுகாதாரத் துறை மேற்பாா்வையாளா்கள் பதிலளித்து பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT