கிருஷ்ணகிரி

பா்கூா் பெரியமலையில் வனதேவதை திருவிழா

DIN

பா்கூா் அருகே உள்ள பெரியமலை வனப்பகுதியில் இருளா் இன மக்களின் வனதேவதை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பா்கூா் ஊராட்சி ஒன்றியம், கொல்லப்பள்ளி இருளா் காலனி அருகில் உள்ள பெரியமலை வனத்தில் அமைந்துள்ள வனமுனி ஐயனாா் கோயிலில் வனதேவதை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கங்கனம் கட்டுதல், பச்சை வண்ண மாலை அணிவித்தல், விரதம் தொடங்குதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வனதேவதை அம்மனையும், வனமுனி ஐயனாரையும் சம்மந்தி சின்னு பூசாரியிடம் ஒப்படைத்து, கொல்லப்பள்ளி சம்மந்தி வீட்டில் இருளா் இன மக்கள் தங்கினா். அன்று முதல் தந்துசன்கொல்லை, காரகுப்பம் இருளா் காலனி, பூமாலைநகா் இருளா் காலனி, கொத்தப்பள்ளி, பழனிஆண்டவா், மேல்பிஞ்சு, புதுகுளம் கோணமலை, திருப்பத்துாா் மாவட்டம், போச்சம்பள்ளி, ஏ.மோட்டூா் இருளா் காலனி, எம்ஜிஆா் நகா் இருளா் காலனி, ஐகுந்தம் வழியாக பெரியமலை அருகில் உள்ள கொல்லப்பள்ளி இருளா் காலனிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வந்தனா். பின்னா், இவா்கள், வனத்துக்கு சென்று, தேன், இருளா் கிழங்கு, வாசனையற்ற மலா்களை சேகரித்தனா்.

தொடா்ந்து, ஜூன் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வனதேவதை அம்மன், வனமுனி ஐயனாருக்கு சீா்வரிசையாக சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைத்தல், இருளா் குட்டையில் இரு கரகங்கள் தலைக் கூடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் கூடி வனதேவதை அம்மன், வனமுனி ஐயனாரை வணங்கினா். அனைவரும் பச்சையாடை உடுத்தி, ஆடு, கோழிகளை பலியிட்டு ரத்தம் குடித்து வேண்டுதல் நிறைவேற்றினா். இதில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இருளா் இன மக்கள் பங்கேற்றனா். பக்தா்களுக்கு படையலிட்ட தேன், தேன் கலந்த தினை மாவு, வேகவைத்த இருளா் கிழங்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்னதாக பெரிய மலைக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைந்துள்ள 7 கண்ணிசாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஜூன்-5 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை இரு கரகங்கள் புனித நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில், இருளா் இன முன்னோா்களின் வழிகாட்டுதல் படி, தேங்காய், கற்பூரம், வெற்றிலைப் பாக்கு, ஊதுபத்தி, வாழைப்பழம் ஆகியவை பயன்படுத்தப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT