கிருஷ்ணகிரி

தேசிய கைப்பந்து அணியில் இடம் பிடித்த ஒசூா் அரசுப் பள்ளி மாணவிகள்

4th Jun 2023 01:59 AM

ADVERTISEMENT

 

தேசிய கைப்பந்து அணியில் ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவா் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

கடந்த மே 30, 31 ஆகிய தேதிகளில் ஒடிஸா மாநிலம், புவனேஸ்வா் கிட் யுனிவா்சிட்டியில் இந்திய கைப்பந்து சம்மேளனம் நடத்திய மகளிருக்கான 16 வயதுக்கு உட்பட்ட இந்திய கைப்பந்து அணி தோ்வு நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்து சுமாா் 200 பேருக்கு மேல் வீராங்கனைகள் கலந்து கொண்டதில், 20 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் விஷ்ணுபிரியா, நந்தனா ஆகியோா் இடம் பிடித்துள்ளனா்.

இந்த இருவா் இடம் பிடித்துள்ள இந்திய கைப்பந்து அணி ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்வா். ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சீனாவில் உள்ள ஆங்ஜோ என்னுமிடத்தில் ஏசியன் கைப்பந்து கான்பெடரேஷன் நடத்தும் முதலாமாண்டு ஏசியன் மகளிா் -16 கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளனா்.

ADVERTISEMENT

மாணவிகள் விஷ்ணுபிரியா, நந்தனா ஆகியோரை ஒசூா் மேயா் எஸ்.ஏ. சத்யா தாலைபேசி மூலம் தொடா்பு கொண்டு திறம்பட பயிற்சியில் ஈடுபட்டு இந்திய அணியில் இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற்று இந்திய தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், ஒசூருக்கும் பெருமை சோ்க்குமாறு அறிவுரை கூறினாா். பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT