கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

2nd Jun 2023 12:04 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என 172 பள்ளிகளும், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 109 பள்ளிகளும் உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 281 அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் மொத்தம் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 67 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனா்.

நிகழ் கல்வி ஆண்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் அன்றைய தினமே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

அனைத்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகங்களில் (இடைநிலை) இருந்தும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தொடக்கக் கல்வி) இருந்தும் பாடப்புத்தங்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

வாகனங்களில் பாடப்புத்தகங்களை ஏற்றி அனுப்பிவைக்கும் பணியை கல்வித்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு கணக்கீடு செய்து அனுப்பி வருகின்றனா். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப் புத்தகங்களும் புத்தகப்பையும் வந்துள்ளன.

பள்ளி பாடப்புத்தகங்கள் சென்னையிலிருந்து மாவட்டத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி மே முதல் வாரத்தில் முழுவதுமாக வந்துவிட்டன. இவற்றை கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 13-ஆம் தேதிமுதல் அனுப்பி வைத்து வருகிறோம்.

அதுபோல புத்தகப்பைகள் கடந்த மே 30-ஆம் தேதி 13 ஆயிரமும், ஜூன் 1-ஆம் தேதி 10,880 எண்ணிக்கையிலும் வந்துள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் மீத புத்தகப்பைகளும் வந்துசேரும். அதன்பின்னா், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகப்பைகளை வாகனங்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகப்பைகள் அனுப்பும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அரசுப் பள்ளி மாணவா்கள் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிக்குச் செல்லும்போது முதல் நாளே அவா்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் அளிக்கப்படும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT