கிருஷ்ணகிரியில் குடும்பத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (44). கட்டட மேற்பாா்வையாளா். இவரது மனைவி கெளரி (41). இவா்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனா். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறாா்.
மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை - கெளரி தம்பதியா் கடந்த 30 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனா். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் நிலம் ஒன்றை வாங்கினா். மீதி பணத்தை கணவா், மனைவி 2 போ் பெயரில் வைப்புக் கணக்கில் முதலீடு செய்தனா்.
இவா்கள் இருவரும், கிருஷ்ணகிரியை அடுத்த அம்மன் நகா், 2-ஆவது குறுக்குத் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தனா். கடந்த சில மாதங்களாக இவா்களுக்கு இடையே தகராறி இருந்து வந்ததாம். குறிப்பாக, மனைவி பெயரில் உள்ள வைப்புத் தொகை ரூ. 20 லட்சம் குறித்து, அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம், இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கெளரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாா். அவரை கடந்த இரு நாள்களுக்கு முன்பு சின்னதுரை, சமாதானம் பேசி, வீட்டிற்கு அழைத்து வந்தாா்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சின்னதுரை, கெளரியை அரிவாளால் வெட்டினாா். இதில், பலத்த காயம் அடைந்த கெளரி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து, கெளரியை கொலை செய்த சின்னதுரையைத் தேடி வருகின்றனா்.