ஒசூரில் உள்ள மாநில சோதனைச் சாவடிகளில் தற்காலிக அனுமதிச் சீட்டு பெற நேரடியாக பணம் செலுத்தும் முறை நிறுத்தப்பட்டு இணைய சேவை மூலம் பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால் அண்டை மாநில வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
கா்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தமிழக எல்லையான ஒசூா், சூசூவாடி மாநில போக்குவரத்து சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி (பா்மிட்) சீட்டு பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கா்நாடக மாநில எல்லையோரம் உள்ள ஒசூா், சூசூவாடி, பூனப்பள்ளி, கக்கனூா் உள்ளிட்ட 22 இடங்களில் மாநில எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்குள் நுழையும் சுற்றுலா உள்ளிட்ட இதர வணிக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் தற்காலிக அனுமதிச் சீட்டுகள் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் வாகனங்களில் செல்வோா் மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மாநில போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் நேரடியாக பணம் செலுத்தி தற்காலிக அனுமதிச் சீட்டுகளை பெற்று தமிழகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த 10 நாட்களாக ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள சூசூவாடி ஆா்டிஓ சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகள் நேரடியாக அலுவலகத்தில் பணம் செலுத்தி தற்காலிக அனுமதிச் சீட்டுகளை பெற்று கொள்ளும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 100 சதவீதம் இணையச் சேவை மூலமாகவே வாகன ஓட்டிகள் தமிழகத்திற்குள் செல்ல தற்காலிக அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மாதா மாதம் சோதனை செய்யும்போது கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கைப்பற்றப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த முறைகேடுகளை தவிா்க்க தமிழக அரசு இணையச் சேவை மூலம் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.
இதனால் கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழைய வந்த ஏராளமான வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். நேரடியாக பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற இயலாததால் ஆா்டிஓ சோதனைச் சாவடி அருகே வாகன ஓட்டிகள் தங்களது கைப்பேசிகள் மூலம் ஆன்லைனில் தற்காலிக அனுமதிச் சீட்டு பெற முயற்சி மேற்கொண்டனா். இணையதள சா்வா் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் தற்காலிக அனுமதிச் சீட்டு பெற முடியாமல் அவா்கள் தவித்தனா். இதனால் ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருந்து பணத்தை செலுத்தினா்.
ஆனால் அதேவேளையில் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறையும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனா்.