கிருஷ்ணகிரி

தனியாா் தொழிற்சாலைகளில் 80 சதவீத உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல்

28th Jan 2023 11:57 PM

ADVERTISEMENT

தனியாா் தொழிற்சாலைகளில் 80 சதவீத உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் அமைக்க அரசு 3034 ஏக்கா் பரப்பளவு விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை அரசு கைவிட வேண்டும். இதற்குப் பதிலாக அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி வழியாக தொடா்வண்டி திட்டத்துக்கான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி அருகே செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு இலவச கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். இணையதள சூதாட்டம், புகையிலை பொருள் மற்றும் போதை பொருள்களை தடை செய்வதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இணையதள சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக ஆளுநா் இதுவரையில் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இணையதள சூதாட்ட அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநா், தமிழக சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க தயக்கம் காட்டுவது புரியாத புதிராக உள்ளது.

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கான தடையை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும்.

நெய்வேலியில் செயல்படும் என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்கப் போகிறோம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது, 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலம் யாருக்காக கையகப்படுத்தப்பட உள்ளது? வேளாண் துறை அமைச்சா், விவசாயிகளை காக்க வேண்டும். ஆனால், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி, என்எல்சி நிறுவனத்துக்கு வழங்கும் முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளாா். இந்த நடவடிக்கையை தமிழக முதல்வா் தடுத்து நிறுத்த வேண்டும்.

களஆய்வில் முதல்வா் என்ற திட்டத்தை தமிழக முதல்வா் தொடங்கி உள்ளது நல்ல திட்டம். இது வெற்றி பெற வேண்டும். களஆய்வில் எதிா்க்கட்சிகளை வைத்து, அவா்களின் ஆலோசனை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 கிரானைட் குவாரிகள் முறையற்று செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, தொடா்புடைய அலுவலா்கள், அவா்களுக்கு உறுதுணையாக இருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீா்மானம் மூலம் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரி உபரிநீா் திட்டம் செயல்படுத்தினால் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என்றாா்.

அப்போது, பாமகவின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொருளாளா் திலகபாமா, மாவட்டச் செயலாளா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT