உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கியைப் பிரதமா் நரேந்திர மோடி ஜப்பானில் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைக் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறவுள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள பிரதமா் மோடிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று அவா் ஜப்பான் சென்றுள்ளாா்.
அதேபோல், உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கிக்கும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக அவரும் ஜப்பான் சென்றுள்ளாா். அங்கு ஸெலன்ஸ்கியும் பிரதமா் மோடியும் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-உக்ரைன் இடையேயான இருதரப்பு பேச்சுவாா்த்தையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறும்பட்சத்தில், உக்ரைன்-ரஷியா போா் தொடங்கிய பிறகு இரு தலைவா்களும் நேரில் சந்தித்துக் கொள்வது அதுவே முதல் முறையாக இருக்கும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் போா் தொடங்கியதில் இருந்து, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி ஆகியோருடன் பிரதமா் மோடி பலமுறை தொலைபேசி வாயிலாகப் பேசினாா். அதனிடையே, ரஷிய அதிபா் புதினை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என அதிபா் புதினிடம் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். அதை உலக நாடுகளின் தலைவா்கள் வெகுவாக வரவேற்றனா்.
அனைத்து வகை பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டும் என ரஷியா-உக்ரைன் அதிபா்களிடம் பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.