அன்னவாசலில் கல் குவாரிகளைத் திறக்கக் கோரி இரும்பு சம்மட்டி, இரும்புச் சட்டியை தோளில் சுமந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் கல்லுடைக்கும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏ.ஐ.டி.யு.சி, கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அன்னவாசல் வருவாய்த் துறை அலுவலா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ. நாகராஜ் தலைமை வகித்தாா்.
கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் டி. சின்னையா, டி. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் கே. ஆா். தா்மராஜன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன் நிறைவுறையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் அன்னவாசல் மக்களுக்கு ஜீவாதாரமாக விளங்கக்கூடிய கல்லுடைக்கும் தொழில் கடந்த 9 மாதமாக குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படாததால் முடங்கிக் கிடக்கிறது. இதனால் கல்லுடைக்கும் தொழிலாளா்கள் வறுமையில் வாடுகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம், கனிம வளத் துறை இப்பிரச்னையில் உடனடித் தீா்வு காண வலியுறுத்தப்பட்டது.