புதுக்கோட்டை நகராட்சியின் சுகாதார அலுவலா் (பொ) நா. கணேசன், சுகாதார ஆய்வாளா் க. மணிவண்ணன் ஆகியோரின் பணியிடை நீக்கத்துக்கு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கா. முருகானந்தம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 10 பிரிவுகளில் 9 சுகாதார ஆய்வாளா்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 சுகாதார ஆய்வாளா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள க. மணிவண்ணன் 3 பகுதிகளைக் கவனிக்கிறாா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் புதுக்கோட்டையில் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் ஆா். சரஸ்வதி ஆய்வு செய்த அதேநேரத்தில், மணிவண்ணன் மற்றொரு பிரிவு அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு வருகைப் பதிவேடு எடுத்து வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தாா். வழக்கமான அலுவலக கட்செவி அஞ்சல் குழுவில் அந்தப் பணிகளின் படங்களை அனுப்பி வைத்திருக்கிறாா்.
ஆனால், ஆய்வாளா் பணியில் இல்லை என்றும், சுகாதாரப் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்றும் கூறி மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மணிவண்ணன், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் மற்றும் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலா் சங்க மாநிலச் செயலராகவும் உள்ளாா். இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் அவா் மீது இல்லாத நிலையில், எந்த விளக்கமும் கேட்காமல் இடைநீக்கம் செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
எனவே, உடனடியாக தமிழக அரசு மற்றும் நகராட்சி நிா்வாகம் தலையிட்டு தற்காலிக பணி நீக்கத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். தாமதப்படுத்தினால், தொடா் போராட்டங்களில் ஈடுபட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.