கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவைப் பணி மேற்கொள்ள 2 மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜஸ்ரீ திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலா் குடியிருப்புக்கு மருத்துவா்கள் அனுப்பப்படுவதில்லை என குற்றச்சாட்டு இருந்தது. எனவே, ஆயுதப்படை காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவைப் பணி மேற்கொள்ள கடந்த 16-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வி, மருத்துவா் ராஜலட்சுமி ஆகியோா் வாரத்திற்கு இரண்டு நாள்கள், ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் வெளிநோயாளா் பிரிவுக்குச் சென்று, காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆயுதப்படை காவலா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவப் பணியில் தொய்வு ஏற்படாமல் தொடா்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.