கிருஷ்ணகிரி

கைவிடப்பட்ட ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் பாதை, ஒசூா் விமான நிலைய திட்டங்கள்!

DIN

ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம் மற்றும் ஒசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிடப்பட்டதாக அறிவித்ததால், ஒசூா் தொழில்துறையினா் அதிருப்தியில் உள்ளனா்.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அனுமதிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, ஒசூா் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், உதான் திட்டப்படி சென்னை - ராமநாதபுரம் இடையே விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் அளித்த பதில்:

2033-க்கு முன்னா் கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் (பெங்களூரு விமான நிலையம்) இருந்து 150 கி.மீ. சுற்றளவுக்குள் புதிய விமான நிலையங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் அனுமதிக்கக் கூடாது என ஒப்பந்தம் உள்ளது. இதனால், ஒசூா் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதியில்லை. இந்த ஒப்பந்தத்தில் கா்நாடக மாநிலம், மைசூரு மற்றும் ஹாசன் விமான நிலையங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களும் 150 கி.மீ. தொலைவுக்குள் அமைந்துள்ளன. கா்நாடக மாநிலத்தில் அனுமதித்த மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள ஒசூருக்கு அனுமதி மறுத்துள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்கும் வகையில் சேலம், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூா், வேலூா் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நெய்வேலி, வேலூா் விமான நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூருக்கு, இந்திய விமானப்படை நிலங்களை வழங்க உள்ளது. ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநில அரசு ஒப்படைக்க உள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

முன்னதாக, முன்னாள் எம்.பி. நரசிம்மன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டாக்டா் அ.செல்லகுமாா் ஆகிய இருவரும் மத்திய நிதி நிலை அறிக்கையில் இந்த ரயில்வே திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என செய்தியாளா்களிடம் தெரிவித்து வந்தனா். மேலும், முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டத்துக்கு ரூ. 1,950 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தாா். ஆனால், நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து ஒசூரில் ஹோஸ்டியா சங்கத் தலைவா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேகமாக வளா்ந்து வரும் தொழில் நகரமான ஒசூருக்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை 3 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தற்போது கா்நாடக மாநிலத்தில் 150 கி.மீ. தொலைவுக்குள் உள்ள மைசூரு, ஹாசன் ஆகிய 2 இடங்களுக்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய அரசு, ஒசூருக்கு அனுமதி மறுத்துள்ளது, ஒரு கண்ணில் வெண்ணைய்யையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்தது போல உள்ளது.

அதேபோன்று தொழில்துறையினரின் 30 ஆண்டுகால கனவுத் திட்டமான ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம் குறித்து அறிவிக்காதது தொழில்துறையினருக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT