கிருஷ்ணகிரி

வரி பாக்கி செலுத்தாத தனியாா் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’

8th Feb 2023 01:24 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாததால், தனியாா் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சொத்து வரி ரூ. 3 கோடியே 65 லட்சமும், குடிநீா் கட்டணம் பாக்கி ரூ. 3 கோடியே 3 லட்சமும், பாதாளச் சாக்கடை திட்டத்தில் ரூ. 81 லட்சம் உள்பட ரூ. 7.50 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளது. வரி பாக்கி உள்ள தொழில்நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டா்களுக்கு நகராட்சி சாா்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரி பாக்கியை பலா் செலுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த பிப். 1-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை. நிலுவைத் தொகையான ரூ.3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608-ஐ வரும் 6-ஆம் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிப். 7 வரை நிலுவை வரி தொகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் ஆய்வாளா் லூக்காஸ், வருவாய் உதவியாளா் செல்வராஜ் ஆகியோா் தனியாா் மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், நகராட்சியில் வரி பாக்கி நிலுவையிலுள்ள அனைவரும் உடனடியாக வரி கட்டுமாறு நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT