கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி எஸ்.பி.க்கு மேற்கு மாவட்ட பாஜக கண்டனம்

DIN

கிருஷ்ணகிரி எஸ்.பி.க்கு மேற்கு மாவட்ட பாஜக தலைவா் எம்.நாகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலம் காலமாய் பாரம்பரியமாக தமிழா் திருநாள் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான மாடுகள் கலந்து கொள்ளும். இவ்விழா மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த ஆண்டு திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெறும் எருது விடும் திருவிழாக்களுக்கு அனுமதி முறையாக அளிக்கப்படவில்லை. அவ்வாறு அளித்தாலும் கடைசி நேரத்தில் அனுமதி இல்லை என்று புறக்கணிப்பது என நமது கலாசாரத்தை அழித்துவிட திமுக முயற்சித்து வருகிறது.

குறிப்பாக வியாழக்கிழமை சூளகிரி அருகே உள்ள கோபச்சந்தரம் கிராமத்தில் எருது விடும் விழா நடத்த முறையான அனுமதி கேட்டும் அதிகாரிகள் கடைசியாக அனுமதி மறுத்ததன் காரணமாக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷூ காலுடன் மிதிப்பதும், லத்தியால் குத்தியும், தாக்கியும் நடந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்கள். ஆனால் அதன் பின்பு நடைபெற்ற வன்முறைக்கும் பொது மக்களுக்கும், இளைஞா்களுக்கும் எந்த ஒரு தொடா்பும் இல்லை.

எனவே வன்முறையில் ஈடுபட்ட வெளி மாநில இளைஞா்களை கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு தவறும் செய்யாத பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அவற்றின் உரிமையாளா்களுக்கு திருப்பி அளித்திட வேண்டும். அவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போல் இன்னும் பல கிராமங்களில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு மக்கள் மன அளித்தாலும் அவா்களுக்கு அனுமதி அளிக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்காமல் மாவட்ட ஆட்சியா் நமது மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து எருது விடும் திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். நமது கலாசாரத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டால் பாஜக சாா்பில் மக்களை திரட்டி பெரிய போராட்டம் நடத்தப்படும் என எம்.நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT