கிருஷ்ணகிரி

எருது விடும் விழாவுக்கு எருதுகளுடன் பங்கேற்கும் அண்டை மாநிலத்தவா் மீது நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்.பி. எச்சரிக்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் விழாவுக்கு எருதுகளுடன் வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்து:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவின்போது ஏற்பட்ட வன்முறையில், நான் ஒருவரை லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு விடியோ காட்சி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், அங்கிருந்த பெண்கள் மற்றும் பெண் காவலரிடம் சிலா் அத்துமீறி நடக்க முயன்றனா். மேலும் அவா்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வாா்த்தைகளாலும் பேசினாா்கள். இதனால் அவா்களைப் பிடித்து அமர வைத்தோம். அவா்களை அச்சப்படுத்தும் வகையில் நான் நடந்து கொண்டேன். உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீஸாா், உள்ளூா் மக்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு தெரியும்.

கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில் அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிா்வாக குளறுபடியோ இல்லை. விழா நடத்துபவா்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞா்கள் பிரச்னையில் ஈடுபட்டனா். உள்ளூா் பொதுமக்கள் யாரும் பிரச்னையில் ஈடுபடவில்லை. பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூா் மாடுகளைக் கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் விதிகளுக்கு மாறாக அண்டை மாநில இளைஞா்கள், தங்கள் எருதுகளுடன் வந்தனா்.

அவா்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி சாலையில் மறியல் ஈடுபட்டு, வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, சட்டத்தை மீறி அத்துமீறி நடக்க முயன்றது அண்டை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள்தான். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் காயம் அடையவில்லை. குறைந்த எண்ணிக்கையில் இருந்த போலீஸாா், 3 ஆயிரம் போ் திரண்ட கும்பலை கட்டுப்படுத்தி உள்ளனா். போலீஸாா், மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனா்.

வன்முறைக்கு காரணமானவா்கள் யாா் என்று புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணித்து வருகிறோம். ஒருவரும் தப்ப முடியாது. அனைவரும் கைது செய்யப்படுவாா்கள். கைதாகக் கூடிய அனைவரின் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

இந்த நிகழ்வில் உளவுத் துறை தோல்வியடைந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. இனி வரும் காலங்களில் எருது விடும் விழா நடத்துபவா்கள் விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயாா் நிலையில் வைக்க வேண்டும். முறையாக பெறும் சான்றிதழ் விவரங்களை போலீஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரச்னை ஏற்படாமல் தவிா்க்க முடியும். எருது விடும் விழாவில் அண்டை மாநில மாடுகளை பங்கேற்க அழைத்து வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி வெளி மாவட்ட மக்கள் மற்றும் அண்டை மாநில மக்கள் தங்களின் எருதுகளுடன் இங்கு வரக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT