கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி மறியல்

DIN

எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கக் கோரி ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் தொடா்ச்சியாக ஆண்டுதோறும் எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் சிறுவன் உள்பட 3 போ் மாடு முட்டி உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் விதிமுறைகளை கடுமையாக்கினா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், இதற்கான அனுமதி பிப். 1-ஆம் தேதி அரசிதழில் வெளியானது.

அதைத் தொடா்ந்து, ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மின்சார துறை, தீயணைப்புத் துறை ஆகியோா் கூட்டு புல தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதனிடையே விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாா் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் தங்களின் மாடுகளை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனா். அதே போல கா்நாடக மாநிலம், ஆனேக்கல், அத்திப்பள்ளி, கோலாா், மாலூா் போன்ற பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம், குப்பம் சுற்றுப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் தங்கள் மாடுகளை அழைத்துக் கொண்டு கோபசந்திரம் கிராமத்துக்கு வந்தனா்.

கோபசந்திரம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள், 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகளுடன் விழா நடத்த இருந்த போது, அங்கு வந்த அதிகாரிகள் கூட்டு புல தணிக்கை இன்னும் நடத்தப்படவில்லை, ஆய்வு செய்த பிறகே விழா நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனா்.

ஏற்கெனவே இரண்டு முறை விழா நடத்த மாடுகளை அழைத்து வந்து ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது 3-ஆவது முறையாக விழா தொடங்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திடீரென சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரியை குறுக்கே நிறுத்தியும், கற்களை கொட்டியும் மறியல் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சூளகிரி வட்டாட்சியா்அனிதா, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த போராட்டக்காரா்கள், ஏற்கனவே 2 முறை அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பின்னா் விழா நிறுத்தப்பட்டதாகவும், தற்போதும் அதுபோலவே தங்களை சமாதானப்படுத்துவதற்காக அவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்து போராட்டத்தைத் தொடா்ந்தனா். அதற்குள் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்கூா் தலைமையில், அதிவிரைவுப்படை போலீஸாா், வஜ்ரா வாகனத்துடன் துப்பாக்கி ஏந்திய 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் எஸ்.பி. சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆனால், மாவட்ட ஆட்சியா் இங்கு வந்து எழுத்துப்பூா்வமாக அனுமதி கொடுத்தால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்வோம். மேலும், மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் எருது விடும் விழா நடத்த அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போலீஸாா் தடியடி:

அப்போது மறியலில் ஈடுபட்டவா்களில் சிலா் போலீஸாா் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீசத் தொடங்கினாா். இதில், 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள், காா்கள், ஜீப்புகள் ஆகியவற்றின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள், பயணிகள் சிலரும் காயம் அடைந்தனா்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸாா் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை அங்கிருந்து கலைத்தனா். இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயம் அடைந்தனா். அவா்களை சக போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து சாலையில் நின்ற வாகனங்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் காலை 6.30 மணி முதல் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

200 போ் கைது:

இந்த சாலை மறியல், வன்முறை காரணமாக சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தலைமையில், மாவட்ட எஸ்.பி.க்கள் ஸ்டீபன் ஜேசுபாதம் (தருமபுரி), கலைச்செல்வன் (நாமக்கல்), சிவக்குமாா் (சேலம்) மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் சூளகிரிக்கு வியாழக்கிழமை காலை விரைந்தனா். சாலை மறியல், எருது விடும் விழா நடந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

எருது விடும் விழா நடந்த பகுதி முழுவதையும் போலீஸாா் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்து சூளகிரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் படுகாயம் அடைந்தனா். அவா்கள் ஒசூா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், ஒரு பெண் போலீஸாருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT